சென்னை:மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக ஏமாற்றி ரூ. 75 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணை வேந்தரான பாரிவேந்தரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக சுமார் 110 பேரிடம் 75 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பெற்றுகொண்டு மோசடி செய்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துவந்த போலீசார் நேற்று மாலையில், எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு பாரிவேந்தரை வரவழைத்து அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை போலீசார் பாரிவேந்தரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்பட ஜாமினில் வெளிவர இயலாத மூன்று கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இன்று பிற்பகல் பாரிவேந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.