புதுடெல்லி: தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணு மின் நிலையம் அமைப்பதற்கு 1988-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்பின்னர் பணிகள் படிப்படியாக முடிவடைந்து முதல் அலகு முழு உற்பத்தியை எட்டியுள்ள நிலையில், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்தபடி அதிபர் புதின், டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் சுத்தமான ஆற்றலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த முக்கியமான இணைப்பு கூடங்குளம் அணு உலை என்று குறிப்பிட்டார்.
இந்தியா-ரஷ்யா உறவின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், பசுமை வளர்ச்சிக்கான கூட்டு தடங்களை உருவாக்குவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பின் அடையாளமாக கூடங்குளம் திகழ்வதாகவும், ரஷ்யாவுடன் 12 ஆண்டு ஒத்துழைப்புடன் இந்தியா மேலும் பல அணுஉலைகளை நிறுவ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் மிகப்பெரிய நிகழ்வு என்று தெரிவித்தார். கூடங்குளம் அணு உலையானது அதிநவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட ரஷ்ய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும் அணு மின் நிலையத்தில் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் நாட்டின் தொழில்நுட்பங்களை இந்திய வல்லுநர்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் புதின் கூறினார்.