லக்னோ:நொய்டா நகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது, கார் டெல்லி-கான்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஐந்துபேர் கொண்ட ஒருகும்பல் அந்த காரின்மீது கற்கள் போன்ற பொருட்களை வீசி எரிந்தது.
அந்த கார் நின்றதும், துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளே இருந்தவர்களை அருகாமையில் இருந்த வயலுக்கு இழுத்து சென்ற அந்த கும்பல் அவர்களிடம் இருந்த பணம், நகைகள் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்தது. ஆண்களை எல்லாம் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அவர்களுடன் இருந்த 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை துப்பாக்கி முனையில் மிரட்டி, கற்பழித்த அந்த ஐந்துபேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் 15 பேரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் குற்றவாளிகளில் மூன்றுபேரை அடையாளம்கண்ட போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாருக்கு முதல் மந்திரி நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், தலா ஒரு வீடும் வழங்கப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.