காத்மண்டு:நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அதிபர் பித்யா தேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
இதையடுத்து பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் புதிய பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசண்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 363 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
61 வயதான பிரசண்டா, இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2009-ஆம் ஆண்டு மே வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.