சென்னை:ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனைகளை படைத்துவருவதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ படம் வெளியாகும்போது அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவந்த ரஜினி, ‘கபாலி’ படம் வெளியானபிறகு கடந்த 24-ந் தேதி சென்னை திரும்பினார்.
‘கபாலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது ரஜினியை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை வெளிப்படுத்தும்விதமாக ரஜினி தனது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்னை வாழவைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‘லைக்கா’ தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வருவாகும் ‘2.ஓ’ மற்றும் நண்பர் தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‘கபாலி’ படத்திலும் ஒய்வில்லாமல் நடித்ததின் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது.
அதையொட்டி இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்தும், மருத்துவ பரிசோதனை செய்துகொண்டும், நலமாகவும் ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய்மண்ணிற்கு திரும்பிய எனக்கு ‘கபாலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இப்படத்தை தயாரித்த என்னுடைய நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா.ரஞ்சித் அவர்களுக்கும், அவருடைய குழுவினர் அனைவருக்கும், சக நடிக, நடிகையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.