சென்னை:சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் வக்கீல்கள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது, நீதிபதிகளின் பெயரைச் சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டும் விதமாக உரத்த குரலில் வாதம் செய்வது, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யவும், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகளில் ஆஜராக தடைவிதிக்கவும் ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சட்ட திருத்தத்துக்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வக்கீல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்ற அமைப்பு இருக்கும் போது, அந்த அதிகாரத்தை பறிக்கும் விதமாக ஐகோர்ட்டு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த ஜூன் 1-ந் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களிலும் வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக நேற்று ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். காலையில் தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீதிமன்ற பணிகளும் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்திருத்தத்தை நீக்கும்வரை போராட்டம் தொடரும் என வக்கீல்கள் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். எனவே இன்றும் ஐகோர்ட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடலாம் என கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இன்று போராட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், வக்கீல்கள் சட்டத்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இன்று அறிவித்துள்ளார்.