சென்னை:கபாலி படத்தை திருட்டுத்தனமாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்தியாவில் உள்ள 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘கபாலி படத்தை வலை தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதித்து’ கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டார்.
ஆனால், ‘ஒரு வலையதளத்தில் இன்று காலை 6.20 மணிக்கே கபாலி படம் முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலைப்புலி எஸ்.தாணு தரப்பு வக்கீல் குருமூர்த்தி, வலை தளத்தில் சட்ட விரோதமாக கபாலி படம் வெளியானது குறித்து இன்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு முறையிட இருக்கிறார்.
அப்போது, கபாலி படத்தை பதிவேற்றம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் அந்த வலைதளம் பயன்படுத்திய இணையதள சேவை வழங்கும் நிறுவனம் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்க உள்ளதாக அவர் கூறினார்.