சென்னை பெண் என்ஜினீயர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் போலீசுக்கு அடையாளம் காட்டினார்.
கடந்த 24–ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்,தமிழகத்தையே உலுக்கியது. சுவாதியை கொடூரமாக வெட்டி கொன்ற கொலைகாரனை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலைகாரன் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அந்த புகைப்படத்தில் இருப்பவன் தான், சுவாதியை கொலை செய்த கொலைகாரன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.
சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய 2–வது நடைமேடையில் ரெயில்வே கேன்டீன் உள்ளது. கேன்டீனில் வியாபாரம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், சுவாதி வெட்டி கொல்லப்பட்டார். இதை கேன்டீனில் இருந்த ஊழியர் ஒருவர் நேரில் பார்த்து உள்ளார். அதிர்ச்சியில் அவர் உறைந்து போய்விட்டார். பயத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் போலீசார் அந்த ரெயில்வே கேன்டீனில் விசாரணை மேற்கொண்டபோது, கேன்டீன் ஊழியர்களிடம் கொலைகாரனின் புகைப்படத்தை காட்டினார்கள், அப்போது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அந்த கேன்டீன் ஊழியர், சுவாதியை கொன்ற கொடூர கொலைகாரன் இவன் தான் என்று அடையாளம் காட்டினார். கொலைக்காட்சியை பற்றியும் அவர் போலீசாரிடம் விவரித்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமான கண்கண்ட சாட்சி ஆவார்.
"கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள். திடீரென்று ‘அய்யோ... அம்மா...’ என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார். சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார்", இவ்வாறு கேண்டீன் ஊழியர் தெரிவித்து உள்ளார்.