அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், ‘ஆரோக்கிய இருதயம்’ என்கிற புதிய திட்டம் நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதில் அப்பல்லோ நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் அப்பல்லோ நிர்வாக தலைவர் டாக்டர் ஹரி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
பேட்டியின் போது, ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் டாக்டர் ஹரி பிரசாத் ஆகியோர் கூறியதாவது: " ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவோம். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டோம். மேலும் ஏதேனும் தகவல்கள் கேட்டால் வழங்க தயாராக இருகிறோம்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. மருத்துவ அறையில் கண்காணிப்பு கேமரா வைப்பது விதிகளுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி தனிமனித சுதந்திரத்தை பறிப்பது போன்றது. ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதே தவிர, மருத்துவ அறையில் கிடையாது.
எனவே, ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்த வீடியோ பதிவுகளும் எங்கள் வசம் இல்லை. அவரது கைரேகை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக எங்களால் எதுவும் கூற இயலாது".