மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்தவர் ஜெயமணி, பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருடைய 2-வது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவரது வலது கையில் திமிங்கலத்தின் உருவத்தை வரைந்திருந்தார். மேலும் "நீலத்திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது" என்றும் எழுதி வைத்திருந்தார்.
இதனால் அவர் இணைய தளம் வழியாக தடைசெய்யப்பட்ட புளூ வேல் விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விக்னேசின் தந்தை ஜெயமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது " செல்போன் மூலம் எனது மகன் இப்படி ஒரு விளையாட்டில் ஈடுபட்டது எனக்கு தெரியாது. இந்த கொடூர விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும். இந்த விளையாட்டை இளைஞர்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. உயிர் பலி வாங்கும் “புளு வேலை” அறிமுகப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்.
எனது மகன் போல வேறு யாரும் இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்கும் முன்பு மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்த விளையாட்டை அழிக்க வேண்டும் என்றார்.