புது டெல்லி: ஊழல், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து , புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
அப்போது, ரூ.2,000 நோட்டை மாற்றுவதில் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர், இதன்காரணமாக அதிக அளவில் ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. இருந்த போதிலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதில் மக்கள் சிரமத்துள்ளாயினர்.
இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு ரூ.200 நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் இன்னும் ஓரிரு நாட்களில் புழக்கத்தில் விடப்படும். புதிய ரூ.200 நோட்டுகளால் நாட்டின் பணப்புழக்கத்தின் நிலைமை மேம்படும்” என்றார்.