சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்னொரு அணியுமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த அமைச்சர்களால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சசிகலாவும், தினகரனும் திடீரென ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
இதனை ஏற்றுக்கொண்ட தினகரன் 60 நாட்கள் வரை பொறுமை காக்கப் போவதாக அறிவித்தார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"கட்சியின் பொதுச்செயலாளர் செயல்பட முடியாமல் இருக்கும் நிலையில் இருக்கிறார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அவரால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் உள்ளன. கட்சியின் தொண்டனாக, துணை பொதுச்செயலாளராக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். கட்சியை வழி நடத்தி செல்லும் முழு அதிகாரமும் எனக்கே உள்ளது. 60 நாட்கள் பொறுத்திருக்கப் போவதாக நான் கூறி இருந்தேன். அந்த கெடு வருகிற 4-ந்தேதியுடன் முடிகிறது. அதற்கு இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன. அதன் பின்னர் எனது செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நீங்களே பார்ப்பீர்கள். அதுவரை பொறுத்திருங்கள்.
இதற்கு மேல் கட்சியை சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கட்சியின் நலனுக்காகவே செயல்பட உள்ளேன். யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை.
2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை குறி வைத்தே கட்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். எனது நடவடிக்கைகள் அனைத்தும் இனி கட்சி நலன் சார்ந்தே இருக்கும்.