மும்பை: மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள காட்கோபர் ரெயில் நிலையத்தின் கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் சம்பவத்தன்று காலை 10.20 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 1-ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். வேகமாக வந்த அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் அந்த பெண்ணை கடந்து சென்று நின்றது.
இந்த சம்பவத்தால் அந்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த மற்ற பயணிகள் பதறி போனார்கள், அந்த பெண் பலியாகி இருப்பார் என அனைவரும் கருதினர், தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர், அவர்கள் ரெயில் புறப்பட்டு சென்றதும் உடலை மீட்பதற்காக தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால், ரெயில் கிளம்பி சென்ற பின்னர் தண்டவாளத்தில் பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. உடனடியாக போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ கட்சியை பார்த்த போது தண்டவாளத்தின் மத்தியில் படுத்தபடி கிடந்த அந்த பெண் கண் இமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்து 2-ம் எண் பிளாட்பாரத்தில் ஏறி அங்குள்ள நடைமேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த கட்சியை பார்த்த ரெயில்வே போலீசார் மெய்சிலிர்த்து போனார்கள்.