சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது டி.டி.வி. தினகரனுக்கு, எதிராக அ.தி.மு.க நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசிவருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறியதாவது:
ஜெயக்குமார் நன்றி மறந்து பேசுகிறார். நாகரீகம் இல்லாமல் பேசுகிறார். ஒரு கிளை கழக செயலாளர் கூட தினகரனை பார்க்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினார். ஆனால் 32 எம்.எல்.ஏ.க்கள் வந்து சந்தித்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள் சாரை சாரையாக, அலை அலையாக வந்து சந்திக்கிறார்கள். ஜெயக்குமார் இப்போது என்ன சொல்லப் போகிறார்.
ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் எங்களால் ஆட்சி கவிழாது என்று கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு:
அவரை குற்ற உணர்ச்சி குத்திக் கிழிக்கிறது. தவறு செய்து விட்டோம் என்று பிராயச்சித்தம் தேடுவதற்கு முயற்சிக்கிறார். அவர் இனிமேல் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவரை ஆதரிக்கும் 12 எம்.எல்.ஏ.க்களின் நிலை மாறும். சீக்கிரம் வந்து சந்திப்பார்கள்.
மேலும் அவர் கூறும்போது, சீனப்பெருஞ்சுவர் போல் டி.டி.வி. தினகரன் தமிழர்களின் மானப்பெருமகன். அவர் ஒரு அணைக்க முடியாத நெருப்பு. அவர் எடுக்கிற எல்லா முயற்சிகளுக்கும் காலம் துணை நிற்கும். வாகை சூடுவார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.