லக்னோ:உத்தரப்பிரேதச மாநிலத்தின் தலைநகர் லக்னோ அருகே உள்ள "ஹஸ்ராட்கஞ்ச்" பகுதியில் இன்று காலை சாரையோரம் ஒருவர் நீண்ட நேரமாக அசைவற்று கிடந்தார், இதனால் சந்தேகம் அடைந்த பாதசாரிகள் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்நபரை பரிசோதித்ததில், அவர் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர், அந்நபரின் உடமைகளை பரிசோதித்ததில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுராக் திவாரி என்பது தெரியவந்தது. திவாரி 2007-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற அவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் திவாரி அப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய சொந்த வேலைக்காக திவாரி உத்தரப்பிரேதச மாநிலத்திற்கு வந்துள்ளார். திவாரியின் முகத்தின் அருகே காயம் இருந்ததாக தெரிவித்துள்ள போலிஸ் அதிகாரிகள், அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.