நாமக்கல்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வருமானத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர், அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடிக்கான ஆவணங்கள் சிக்கின.
இந்த சோதனை நடந்த போது அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல் அரசு ஓப்பந்தகாரருமான சுப்பிரமணியன் என்பவர் வீட்டிலும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடந்த போது சுப்பிரமணியன் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார், வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் அவர் வருமான வரித்துறை விசாரணைக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் அரசு ஓப்பந்தகாரரான சுப்பிரமணியன் இன்று காலை தனது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணியனுக்கு 58 வயது ஆகிறது. இவரது மனைவி பெயர் சாந்தி (வயது 48). இவர்களுக்கு அபி (30) என்ற மகளும், சபரி(24) என்ற மகனும் உள்ளனர்.