சென்னை: தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 25) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட இந்த முழு அடைப்புப் போராட்ட அழைப்பை ஏற்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.
நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவையும் இந்த போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, இதனால் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையனும் இந்த போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி தொண்டர்கள் தங்களது கட்சி கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையைப் பொருத்தவரை தி.நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கிவருகின்றன. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி போன்ற பொது போக்குவரத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க முக்கிய இடங்களில் உச்ச கட்ட போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின், மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.