கோத்தகிரி:நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1600 ஏக்கர் எஸ்டேட் உள்ளது. இந்த கொடநாடு எஸ்டேட்டில் 5 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட சொகுசு பங்களா உள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஓய்வுக்காக கொடநாட்டில் உள்ள சொகுசு பங்களாவிற்கு வந்து செல்வார்.
இந்த சொகுசு பங்களாவில் நேபாளத்தை சேர்ந்த ஓம்கர், வடமாநிலத்தை சேர்ந்த கிஷன் பகதூர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் 2 வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் எஸ்டேட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஓம்கர், கிஷன் பகதூர் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் காவலாளி ஓம்கர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் படுகாயத்துடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த, சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் கொடநாடு பங்களாவுக்கு வந்த கும்பல் அ.தி.மு.க. கட்சியின் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், ஆவணங்களையும் எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.