திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் கடந்த 11-ந் தேதி டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அங்கு போராட்டம் நடத்தியவர்கள் அரசு டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பூர் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மற்றும் போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர்.
இதில், ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்யினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சாமளாபுரம் தடியடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஈஸ்வரியை கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனிடம் சுமார் 3 மணி நேரம் நடத்தினார்.
அப்போது, சாமளாபுரம் பகுதியில் சம்பவத்தன்று எப்போது போராட்டம் தொடங்கியது? பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? தடியடி நடத்தும் அளவுக்கு அங்கு பதட்டமான நிலை இருந்ததா? உயர் அதிகாரியாக இருந்து கொண்டு ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தது ஏன்? என்று பல்வேறு விதமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனும் பதில் அளித்துள்ளார்.
இந்த விசாரணை விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. இந்த விவரங்கள் அனைத்தும் திருப்பூர் கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்.