திருச்சி:தமிழக அரசியலில் தற்போது நடந்துவரும் பரபரப்பான சூழ்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலாவையும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த தினகரனையும் அ.தி.மு.க.வில் இருந்து அக்கட்சி அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஒதுக்கினர்.
இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டையில் நேற்று நடந்த விழாவில் அ.தி.மு.கவின் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்து அ.தி.மு.க அமைச்சர்கள் காரில் எரி புறப்பட்டனர். அப்போது ராஜராஜ சோழன் என்பவர் தலைமையில் அங்கு வந்த சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் மாநில பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை விலக சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் மாவட்ட செயலாளராகிய உங்களை பதவி விலக சொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என எழுதியிருந்த மனுவை அளித்தனர்.
மேலும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர், இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலா ஆதரவாளர்களை தாக்க தொடங்கினர். பதிலுக்கு சசிகலா ஆதரவாளர்களும் தாக்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான ராஜராஜ சோழன் உள்பட 5 பேர் மீது மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.