சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து, நேற்று அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால் கீதா லட்சுமி விசாரணைக்கு ஆஜராகவில்லை. அத்துடன் தனக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "வருமான வரித்துறை துணை இயக்குனர் எனக்கு கடந்த 7-ந்தேதி ஒரு சம்மன் அனுப்பியுள்ளார். அதில், ஏப்ரல் 10-ந் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னால் நேரில் ஆஜராக முடியாது என்று கூறியதால், வருகிற 12-ந்தேதி நேரில் வரவேண்டும் என்று வருமானவரித்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், என்னை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட துணை இயக்குனருக்கு அதிகாரம் கிடையாது.
என் வீடு, அலுவலகத்தில் ஏப்ரல் 7 மற்றும் 8-ந் தேதிகளில் சோதனை நடந்தது. இந்த சோதனை முடிவதற்கு முன்பே, ஏப்ரல் 10-ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று 7-ந்தேதியே சம்மன் அனுப்பியுள்ளனர். இது சட்டப்படி செல்லாது. எனவே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கீதாலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீதாலட்சுமியின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட், கீதாலட்சுமி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து கீதா லட்சுமி தனது மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.