சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக சொல்கிறார்கள். அந்த தொகுதி மக்களை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஒரு அணியினர் ஒன்று வெற்றி பெற வேண்டும். அல்லது தேர்தலை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் ஈடேறாது.
இந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாக இருக்கும். நீங்கள் யாருக்கும் வேண்டுமானாலும் வாக்களியுங்கள். சுயேட்சைக்கு கூட வாக்களியுங்கள். ஆனால் நல்ல முடிவு எடுங்கள்.
நேற்று அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தது. அங்கிருந்து ஒருவர் ஆவணத்தை கொண்டு சென்று ஓடுகிறார் என்றால் என்ன அர்த்தம். அந்த ஆவணத்தில் என்ன இருந்தது. வருமான வரித்துறை என்பது நாட்டில் வலுவான அமைப்பு. தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்டது. அத்தகைய அமைப்பையே ஏமாற்றுகிறார்கள்.
இவ்வாறு நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.