புதுடெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஆனால் அவருக்கு அளித்த 100 கோடி ரூபாய் அபராத தொகையை உறுதி செய்து இருந்தது. அதே நேரம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறையும் தலா பத்து கோடி அபராதமும் விதித்து சிறப்புநீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் கர்நாடக அரசு மார்ச் 21-ம் தேதி சீராய்வு மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மனுவில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து அவர்கள் மீதான குற்றசாட்டுகள் நிருப்பிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். மேலும் அவருக்கு அளித்த 100 கோடி ரூபாய் அபராத தொகையை அவரது சொத்துகளை விற்று வரும் பணத்தில் கட்ட வேண்டும் என கர்நாடக அரசின் கோரிக்கை மனுவில் இருந்தது.
இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராவ் அமர்வு குழு மனுவினை விசாரித்து கர்நாடக அரசின் மறுசீராய்வு மனுவினை தள்ளுபடி செய்தும், அவருக்கு அளித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை கட்டத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.