(ஞாயிறு காலை 10.30 மணிக்கும் மீண்டும் மாலை 5.30 மணிக்கும்)
தொலைக்காட்சிகளில் பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் மத்தியில் சில பழுது நீக்கும் நிகழ்ச்சிகளும் வரவே செய்கின்றன. 'நியூஸ் 7' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகள் இந்த வகையிலானவை. அதில் ஒன்றுதான்,'அறிவுக் கொழுந்து' நிகழ்ச்சி.
'அறிவுக்கொழுந்து' பற்றி..!
பொழுதைப் போக்கும் நிகழ்ச்சிகள் மத்தியில் அறிவைப் பெருக்கும் ஒன்றாக இது விளங்குகிறது. அதற்கான திட்டமிட்ட வடிவமைப்பில் இது உருவாக்கப் படுகிறது. இந்நிகழ்ச்சி வெவ்வேறு பிரிவுகளாக வருகிறது. முதலில் 'வார்த்தையும் வரலாறும்' பகுதி இடம் பெறுகிறது.
'வார்த்தையும் வரலாறும்'
மொழி மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பாகும். அம் மொழியிலுள்ள சொற்கள் உருவான விதம் சுவாரஸ்யமானது. அவை பற்றிய சுவையான தகவல்களை வழங்கும் நிகழ்ச்சியே 'வார்த்தையும் வரலாறும்' .தமிழில் வழங்கும்- புழங்கும் சொல் பற்றியும் அதன் தவறான புரிதல் பற்றியும் முறையான பொருள் பற்றியும் இந்தத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிதான் 'வார்த்தையும் வரலாறும்' .
உதாரணத்துக்கு சூர்ப்பனகை என்றால் எமனின் தங்கை என்பார்கள்.ராவணனின் தங்கை என்பார்கள். இதுபற்றிக் கல்லூரி மாணவர்களிடம் கேட்டால் சூப்பு, நகை பற்றி யெல்லாம் தொடர்பு படுத்திப் பேசுவார்கள் ஆனால் சூர்ப்பம் என்றால் முறம், நகை என்றால் நகம். முறம் போன்ற நகத்தை உடையவள் என்று பொருள்.இப்படி வேடிக்கையாகப் பேசி உண்மையைக் கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சி இது. 'தங்கிலீஷும் சுத்த தமிழும்'
தொடர்ச்சியாக வரும் 'தங்கிலீஷும் சுத்த தமிழும்' பகுதியில் நாம் சகஜமாகப் பயன் படுத்தி வரும் ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கத்தை அறியலாம்.
உதாரணத்துக்கு 'ப்ளாக் போர்டில் ஒயிட் சாக்பீஸால் எழுதலாம் 'என்பதை தமிழில் கேட்டால் கறுப்புச் சுவரில் சுண்ணாம்புக்கட்டி, ராமக்கட்டி என்று பிதற்றுவார்கள்.
பிறகு அதன் உண்மையான பொருள் கூறப்படும்.
இந்த நிகழ்ச்சி ஞாயிறு காலை 10.30 மணிக்கும் மீண்டும் மாலை 5.30 மணிக்கும் இடம் பெறுகிறது. இதை ராகேஷ் - சரண்யாகலகலப்பாகத் தொகுத்து வழங்குகிறார்கள்.
இதற்காகக் கல்லூரிகளில் படப்பிடிப்பு நடத்தப் படுகிறது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் பிற கல்லூரிகளிலும் குறிப்பாக விழாக்காலங்களில் படப்பிடிப்பு நடத்தப் படுகிறது.