கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த டாக்டரிடம் சுங்க கட்டணமாக ரூ.4 லட்சம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பி என்ற இடத்திற்கு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை இரவு 10.30க்கு மருத்துவர் ராவ் என்பவர் தனது காரில் வந்துள்ளார். அவர் சுங்க கட்டணமான ரூ.40 செலுத்த தனது டெபிட் கார்டை சுங்க ஊழியரிடம் வழங்கியுள்ளார். ஆனால் சுங்க ஊழியார் கவன குறைவாக ரூ.40-க்கு பதில் 4 லட்சம் என இயந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பின் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே அந்த சுங்கச்சாவடிக்கு திரும்பிவந்து நடந்தவற்றை கூறியுள்ளார். எனினும் ஊழியர்கள் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து ராவ், அருகிலிருந்த காவல் நிலையத்தை அணுகி நடந்ததை கூறியுள்ளார். காவலர் விசாரித்ததை தொடர்ந்து, தனது ஊழியர் மீது தவறு இருப்பதாக கூறிய நிறுவனம், டாக்டரிடம் ரூ.3,99,960ஐ திரும்ப கொடுக்கப்பட்டது.