சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடைகோரி தமிழ்நாடு முழுவதும் நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
தமிழ்நாட்டு மக்களிடம் எங்களுக்கு கிடைத்துள்ள ஆதரவு காரணமாக நாங்கள் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வரும் உண்மையான அ.தி.மு.க. வினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் அதை நிரூபித்து காட்டுவோம். எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அதன் மூலம் நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பது நாட்டு மக்களுக்கு விரைவில் காட்டப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆட்சிமன்ற குழு கூடி முடிவு செய்யும். அதன் பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.