கொழும்பு:கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு படகில் சென்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ (21) என்ற மீனவர் பரிதாபமாக இறந்து போனார், சரண் என்ற இன்னொரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்களுடைய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கொழும்பு நகரில் நேற்று இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது இரு தரப்பிலும் பரஸ்பரம் தங்களது சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்படுவார்கள்.
இதேபோல் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கைதாகி இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இலங்கை மீனவர்கள் 19 பேரை இந்திய அரசு விடுதலை செய்யும்.