புது டெல்லி:ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். முதலில் மீத்தேன் என்ற பெயரில் வந்த இந்த திட்டத்தை தற்போது பெயர் மாற்றி செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
தமிழகத்தை இப்படி தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் செயலை கண்டிக்கிறோம். இந்த போராட்டம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விளக்கினோம். அவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் தாமதமானது. இதில் உள்ள தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை. எனவே, விரிவாக விசாரணை நடத்தி சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.