ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஜ விசாரணை தேவை டி.ராஜேந்தர் கோரிக்கை!
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று ஓபிஎஸ் மேற்கொள்ளவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் காலம் கடந்த ஒரு நடவடிக்கை என்று லட்சிய திமுகவின் நிறுவனத் தலைவரான திரு விஜய டி ராஜேந்தர் விமர்சித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, திரு ஓ பன்னீர் செல்வம் கவர்னரிடம் சென்று, ‘என்னை மிரட்டி ராஜினாமாவை வாங்கினார்கள்’ என்று புகார் செய்திருக்கிறார். இந்த செய்தி வெளியானவுடன் முதலில் நான் அதிர்ச்சியானேன். ஏனெனில் ஒரு முதல்வர் இப்படி செய்யலாமா? ஒருவர் மிரட்டல் விடுக்கிறார் என்றால், கமிஷனரிடம் சென்று இ பி கோ செக்ஷன் 503 யின் கீழ் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கலாமே. இதை விடுத்து ஏன் கவர்னரிடம் சென்றீர்கள்?
செப்டம்பர் 22 ஆம் தேதியன்று அம்மா அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 27 ஆம் தேதியன்று காவிரி தீர்ப்பாயம் தொடர்பான விவாதக் கூட்டம் ஒன்று அன்றைய முதல்வரான ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றதாகவும், அதில் அன்றைய சிறப்பு தலைமை செயலாளரான திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் திரு ராம்மோகன் ராவ், முதல்வரின செயலாளர் வெங்கடரமணன் மற்றும் ராமலிங்கம் ஐ ஏ எஸ் ஆகியோர் அதில் கலந்துகொண்டதாகவும், இதில் அம்மா அவர்கள் ஒரு முக்கிய முடிவினை எடுத்திருக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது.
இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒன்றைக் கேட்கிறேன். ஒரு கூட்டம் நடைபெற்றால் அதன் அடிப்பகுதியில் இடம் பெறும் குறிப்பு பகுதியில் யார் கலந்துகொண்டார்களோ அவர்களின் கையெழுத்து இருக்கும். அப்படியென்றால் முதல்வர் அம்மா அவர்களின் கையெழுத்து அதில் இடம்பெற்றிருக்கும். அதை இப்போது காட்டுங்கள். எங்கே அந்த குறிப்பு?
அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மேதகு ஆளுநர் அவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைப் பெறும் முதல்வரை சந்திக்க செல்கிறார். ஆனால் அவர் வெளியே வந்து முதல்வரைச் சந்திக்க முடியவில்லை என்று தெரிவிக்கிறார். பின்னர் அக்டோபர் 22 ஆம் தேதியன்று மீண்டும் மேதகு ஆளுநர் முதல்வரை சந்திக்கச் செல்கிறார். அப்போது முதல்வர் அவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்களாம். வாயால் பேச முடியவில்லை என்றாலும் சைகைகளால் பேசினார்களாம். நலமாக இருப்பதாக தெரிவித்தாராம். நான் கேட்கிறேன், முதல்வர் சைகை செய்தார்கள் என்றால், அவர்கள் இடது கையால் சைகை செய்தார்களா? அல்லது வலது கையால் சைகை செய்தார்களா? ஆனால் மறுநாள் மேதகு ஆளுநர் இவர்கள் சொன்னதை மறுத்தார். ஏனிந்த முரண்பாடு?
அந்த சமயத்தில் ஆக்டிங் சி எம்மாக இருந்தவர் பன்னீர் செல்வம் தானே? அப்போ ஆக்க்ஷன் எடுக்காமல் இப்போது எதற்கு ஆக்டிங் செய்கிறார்?
சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் நான் எந்த அறிக்கையையும் விடவில்லை. ஆனால் நான் கோவையில் நடைபெற்ற கூட்டத்திலேயே தெரிவித்தேன். இந்த சசிகலாவால் ஒரு மணி நேரம் கூட முதல்வராக முடியாது என்றேன். இது என்னுடைய ஜாதகக் கணிப்பு அல்ல மக்களின் விருப்பம். மக்கள் யாவரும் சசிகலா முதல்வராவதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. நான் ஆன்மீகவாதியாக இருந்து இதனை அன்றே சொன்னேன்.
ஓபிஎஸ் அவர்களை திமுக தான் வழிநடத்துகிறதா? என்று பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது, ‘அறிக்கையில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். சூரியனுக்காக காரிய நமஸ்காரம் என்றால் ஜாதகத்தில் சூரியன், குரு, சுக்ரன் போன்ற நவகிரகங்கள் இருக்குமே அதைப் பற்றியதாக கூட இருக்கலாம். இதன் பின்னணியில் ஆயிரம் பொருள் இருக்கிறது.’ என்று பதிலளித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறீர்களா? என்று கேட்டபோது, ‘ஜெயலலிதாவின் மரணம் மர்ம நாவல் போல் பல மர்ம முடிச்சுகள் இருக்கன்றன. இதனை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து பணியாற்றி, இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும். செப்டம்பர் 22 முதல் பிப்ரவரி 5 ஆம் தேதிவரையிலான கால கட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான சிபிஐ விசாரணை தேவை. இது குறித்து மத்திய அரசு இனியும் காலம் தாமதிக்காது விசாரிக்க முன்வரவேண்டும்.
நான் ஒரேயொரு வினாவைத்தான் திரு ஓ பிஎஸ்ஸைப் பார்த்து கேட்கிறேன். இப்போது நீங்கள் கேட்கும் நீதி விசாரணையை ஏன் நீங்கள் பதவியில் இருந்த போது தொடங்கவில்லை? இதைத்தான் நான் இப்போதும் கேட்கிறேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேட்ட போது, ‘டெல்டா மாவட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்தவிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அனுமதிக் கொடுத்தவர் தான் திமுகவின் செயல் தலைவரான மு க ஸ்டாலின். இன்று அவர் இத்திட்டத்தை எதிர்க்கிறார். போராட்டக்காரர்களுடன் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறார்.
முக ஸ்டாலினின் இந்த நிலைப்பாட்டையும், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்பதையும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெளிவுப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியதை நான் வரவேற்கிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுகவின் நிலை குறித்து கேட்டபோது, ‘உள்ளாட்சி தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடும். ஆண்டவன் அருளும், அவசியமும் ஏற்பட்டால் சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறோம்" என்று பதிலளித்தார் டி ராஜேந்தர்.