புனே:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 260 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 105 ரன்னில் சுருண்டது. ஓ'கீபே அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் (109) சதத்தால் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 440 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 441 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து விளையாடிய இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இந்தியா 33.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் சேதேஷ்வர் புஜாரா அதிகப்பட்சமாக 31 ரன்களை குவித்தார்.
இதனால் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.