சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அமளி ஏற்பட்டதை தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்றும்படி சபைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனால் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து சட்டசபையில் தாங்கள் தாக்கப்பட்டது, வெளியேற்றப்பட்டது, அதன் பின்னர் வாக்கெடுப்பை நடத்தியது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தனர்.
இதற்கிடையே மு.க.ஸ்டாலின் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறுகிறது. பல இடங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இது போன்ற போராட்டங்கள் நடந்து வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.