சென்னை:தமிழகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார், இந்த தலைமைக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்ள மக்களை சந்தித்து உண்மை நிலையை அவர்களுக்கு விளக்கப்போவதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அதற்கு துணைபோகும் தங்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிப்பதற்காகவும், அமைதியான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழகம் முழுவதும் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களையெல்லாம் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துதற்கு வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் உடனே விடுவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றி வைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம்.
ஜெயலலிதா ஆட்சியில் எவ்வாறு பாரபட்சமின்றி காவல்துறை செயல்பட்டதோ, அதுபோல் தற்போதும் பாரபட்சமின்றி நடுநிலையோடு தொடர்ந்து செயல்படவேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.