டெல்லி: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் 14-ம் தேதி தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் நிரபராதிகள் என கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமி கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், தீர்ப்பு ஒரு வார காலத்திற்குள் வழங்கப்படும் என பிப்ரவரி 6-ஆம் தேதி நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு செவ்வாய்க்கிழமை கூடுகிறது, எனவே அன்றே இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.