சென்னை: கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் சிலர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்களை யாரும் சிறை வைக்கவில்லை நாங்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து, எப்போதும் நீங்கள் தான் முதல்வராக இருக்க வேண்டும். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம் என்றார். அப்போதே ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் கைகோர்த்து விட்டார் என்பது தெரிந்து விட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது. அவர் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
இங்கு 129 எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கிறோம். சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அவர்களது வீடுகளில் தங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அழைக்கப்படலாம் என்பதாலும், ஊருக்கு சென்று வர இயலாது என்பதாலும் சொந்த செலவிலும் நாங்கள் இங்கு தங்கியுள்ளோம். செல்போன்களில் தேவை இல்லாத அழைப்புகள் வந்ததால் நாங்களாகவே சுவிட்ச்-ஆப் செய்து வைத்துள்ளோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.