மும்பையில் இருந்து இன்று சென்னை வந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதையடுத்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்.கள் கூட்டத்தில் அதிமுக சட்டபேரவை தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆளுநரும் அறிவித்தார், மேலும் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் வரை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக செயல்படுவார் என ஆளுநர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி இரவு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக தெரிவித்தார். மேலும் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் விரும்பினால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெறுவதாகவும் அறிவித்தார்".
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணியளவில் ராஜ்பவனில் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதேவேளையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் சந்திக்க உள்ளார்.