சென்னை:கடந்த 5-ந் தேதி நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பொது செயலாளர் சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தில் சசிகலா பெயரை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிந்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சென்னை மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய ஓ. பன்னீர்செல்வம் திடீர் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதனால் அவர் அ.தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப்பதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மீண்டும் கூடியது. ராயப்பேட்டை தலைமை கழகத்தில் நடந்த இக்கூட்டத்தில், மொத்தம் உள்ள 134 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களில் 131 பேர் கலந்து கொண்டனர். 2 எம்.எல்.ஏக்கள் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், சசிகலாவை முதல்வர் பதவியில் அமர்த்தும் கோரிக்கையுடன், எம்.பி.க்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்திக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேருந்துகள் மூலம் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், குடியரசு தலைவரை சந்திப்பதற்காக அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.