சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆந்திரா அரசு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்துவிட்டுள்ளது. அந்த நீர் நாளை பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுக்கான நீர் ஆதாரம் என்பது வடகிழக்குப் பருவமழை மூலம் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் வெறும் 34 செ.மீ மழை மட்டும்தான் பெய்துள்ளது இது இயல்பை விட 57 சதவிகிதம் குறைவான மழையாகும். இதனால் தற்போதே சென்னையில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 2000 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.