நியூஸ் 18 தமிழ்நாடு - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
புதுமை நாயகன் - பார்த்திபனுடன் ஓர் உரையாடல்
(சனி காலை 11.30 மணிக்கு மற்றும் இரவு 9.30 மணிக்கு)
புதிய பாதையில் புயல் வேகத்தில் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த பார்த்திபன் தமிழ் சினிமாவில் ஒரு புதிய போக்கை தொடங்கி வைத்தவர். நாயகனுக்கான இலக்கணங்களை உடைத்தவர். வித்தியாசம் என்பதை தனது இயல்பாக்கிக்கொண்டவர்.
இப்போது ‘கோடிட்ட இடங்களை நிரப்ப’ வருகிறார். தனது திரையுலக அனுபவம், இயக்குநராக இருந்து முழுநேர நடிகனாக மாறி, பிறகு மீண்டும் இயக்குநராக மாறியிருக்கும் நிலை... என பல்வேறு அம்சங்கள் குறித்து மனம் திறந்து உரையாடுகிறார்.
தமிழர் பாட்டு -சித்தன் ஜெயமூர்த்தியுடன் ஒரு சந்திப்பு
(சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மற்றும் ஞாயிறு மதியம் 3.30 மணிக்கு..)
மண்ணின் பாடலை, மக்களின் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் நாட்டுப்புற இசைக்கலைஞர் சித்தன் ஜெயமூர்த்தியின் இசைப் பேட்டி இது. நாட்டுப்புற பாடல் என்பது பொழுதுபோக்காக பாடுவது மட்டுமல்ல... அதற்குள் மக்களின் வாழ்க்கை, அவர்களின் அழகியல் சார்ந்த வாழ்வு எல்லாம் பொதிந்திருக்கிறது என சொல்லும் சித்தன் ஜெயமூர்த்தி பாடல்களின் வழியே ஓர் அழகிய இசைப் பயணத்தை நிகழ்த்துகிறார்.
நியூஸ் 18 தமிழ்நாடு
எத்திசையும் தமிழ் மணக்க...
சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கும், இரவு 9.00 மணிக்கும்...
தமிழ் பேச்சுமொழியின் பன்முகத்தன்மை, தமிழ் எழுத்துகளின் நீண்ட நெடிய வளர்ச்சிப்போக்கு, தமிழ் இசைக் கருவிகளின் கொண்டாட்டம்... என தமிழ் மரபின் வேர்களை ஒன்று திரட்டி தரும் நிகழ்ச்சிதான் எத்திசையும் தமிழ் மணக்க. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு பேச்சுமொழி இருக்கிறது. இது வெறுமனே சொற்களின் தொகுப்பு அல்ல. அந்தந்த வட்டாரத்து மக்களின் பண்பாட்டையும், அவர்களின் வாழ்க்கைமுறையையும் இந்த பேச்சுமொழி தனக்குள் வைத்திருக்கிறது.
இதை எழுத்தாளர்களின் வழியே பதிவு செய்கிறோம். ஏராளமான தமிழ் இசைக் கருவிகள் நம் வரலாறு நெடுகிலும் இருந்து வந்திருக்கின்றன. அவை காலப்போக்கில் அழிந்துபோனாலும் கூட இன்னும் பல கருவிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவற்றில் 18 வகையான தமிழ் இசைக் கருவிகளைப் பற்றி முதல்முறையாக பதிவு செய்கிறோம்.
மேலும், தமிழ் என்ற மொழி எப்படி காலம்தோறும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு வருகிறது, நீண்ட நெடிய பாரம்பரியம் இருந்தாலும் நவீன அறிவியல் கலைச்சொற்களையும் உடனக்குடன் உருவாக்கி; உள்வாங்கிக்கொண்டு ‘சீரிளமைத் தமிழ்’ மொழியாக வளரும் நம் மொழியின் சிறப்பையும் இதில் இணைத்துத் தருகிறோம். தமிழர் திருநாள் தினத்தன்று அதன் உண்மையான பொருளில் தமிழைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது. காணத் தவறாதீர்கள்.