மதுரை:தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆ.தி.மு.க எம்.எல்.ஏ-வும், நடிகருமான கருணாஸ் கூறியதாவது:-
தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியமிக்கது. எங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். 2011-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. ஆனால் தற்போது மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
கச்சத்தீவு, முல்லை பெரியாறு, காவிரி, இலங்கை தமிழர் பிரச்சனை போன்றவற்றில் மத்திய அரசு காலம் காலமாக புறக்கணித்து வருகிறது. நம் உரிமையை இழந்து வருகிறோம். இந்தியாவை முதலில் மொழி வாரியாக பிரித்தார்கள்.
தற்போது மாநில வாரியாக பிரிக்கப்படுகிறது. குத்துச்சண்டை, குதிரை பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலாவது ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.