லக்னோ: உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது, சமாஜ்வாடி கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் மோதல் உருவானது.
கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே இருந்து வந்த மோதல் முலாயம்சிங் யாதவ் 325 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பூதாகரமாக வெடித்தது. அந்த வேட்பாளர் பட்டியலை ஏற்காத அகிலேஷ் யாதவ் 235 தொகுதிகளுக்கான போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனால் கடும் கோபம் அடைந்த முலாயம்சிங் யாதவ் நேற்றிரவு முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை சமாஜ் வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார். பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவும் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டார்.
உத்தரபிரதேசத்துக்கு புதிய முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று முலாயம்சிங் யாதவ் அறிவித்தார்.
இதையடுத்து கட்சியின் தலைவர் முலாயம் சிங்கும், அகிலேஷ் யாதவும் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக தனித்தனியாக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினர்.
முலாயம்சிங் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்த அவசர கூட்டத்தில், அவரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் அகிலேஷ் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக்கூட்டத்திலும் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் அவர் அறிவித்த வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியில் உள்ள பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக இருந்தனர். எனவே, சமாஜ்வாடி கட்சி இரண்டாக பிளவுபடும் அபாய நிலை உருவானது.
இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரையும் சமாதானம் செய்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ் இருவரும் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முலாயம் சிங் உத்தரவின்பேரில், அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சிவபால் யாதவ் கூறினார். இதனால் கட்சிக்குள் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.