சென்னை:முன்னால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் தனபால் அதிகாரப்பூர்வமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனிடம் இது பற்றி முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால், அவர் தேர்வான தொகுதியில் அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அந்த அடிப்படையில் வரும் மே மாதத்துக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது மார்ச் மாதம் ஆர்.கே.நகரில் தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.