சென்னை:தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய், தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் ராம மோகன ராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவருக்கும், வருமான வரித்துறையினர் ‘சம்மன்’ அனுப்பி இருந்தனர்.
சம்மனை பெற்றுக்கொண்டு ஆஜராகாத ராம மோகனராவ் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அதேபோல் அவருடைய மகன் விவேக்கும் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.
இதற்கிடையில், மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு ராம மோகனராவ் நேற்றிரவு 9 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை ராம மோகன ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட நான் தான் இப்போதும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு எதிராக சோதனை ‘வாரண்ட்’ ஏதுமின்றி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலக அறையிலும், அண்ணாநகர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமை செயலகத்துக்குள் மத்திய துணை ராணுவப் படை நுழைந்திருக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தன்னையும் தனது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும் வீட்டுக்காவலில் அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்த அவர், தனக்கும் மணல் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சேகர் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
செய்திகளில் வந்ததுபோல் என் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயோ, கிலோ கணக்கான தங்கமோ பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்த ராம மோகன ராவ், வெறும் ஒரு லட்சத்து சொச்சம் ரொக்கமும், தனது மனைவியிடம் இருந்த 40 சவரன் தங்க நகைகளும்தான் கைப்பற்றப்பட்டன என கூறினார்.
தன்னை சிலர் குறிவைத்திருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளருக்கே உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.