சென்னை:இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கோரிக்கையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒட்டு மொத்த தமிழக மக்களால் ‘அம்மா’ என்ற உயரிய பெரும் பேற்றை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பால் தமிழகமே துயரக் கடலில் ஆழ்ந்துள்ளது. குறிப்பாக தாய்மார்கள், ஒவ்வொருவரும் தம் வீட்டு இழப்பாய் எண்ணி துயரத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள். அதற்கு காரணம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் மீது காட்டிய அக்கறையே.
எந்த மாநிலத்திலும் இல்லாத முன்மாதிரி திட்டமாக, தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா சானிட்டரி நாப்கின் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பணிபுரியும் மகளிருக்கு 9 மாத பேறு கால விடுமுறை, அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் என பெண்களுக்கான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர். பெண்குலத்தின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்.
எல்லா மாநிலங்களும் பின்பற்றும் வகையில், இந்த முன் மாதிரி திட்டங்களை சிந்தித்து செயல்படுத்திய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய பணியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.