புதுடெல்லி:மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த மாதம் 7-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுஷ்மாவுக்கு 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதால், அவரது சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தங்களது சிறுநீரகங்களை தானமாக அளிக்க பொதுமக்களில் பலர் ஆர்வம்காட்டி வந்தனர்.
இந்நிலையில், அவரது உடலுக்கு பொருந்தக்கூடிய வகையில் சிறுநீரகம் கிடைத்ததால் இன்று காலை 8.30 மணியளவில் சுஷ்மாவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் தொடங்கியது.
அவரது உறவினர்கள் தானமாக அளிக்க முன்வந்த சிறுநீரகங்கள் பொருந்ததாத நிலையில் உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டதாகவும் பகல் 2.30 மணியளவில் ஆபரேஷன் முடிந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு சுஷ்மா சுவராஜ் மாற்றப்பட்டதாகவும் இன்று பிற்பகல் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.