புவனேஸ்வரம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந்தேதி அறிவித்தது.
அதே நேரத்தில், அதற்கு ஈடாக 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது, இருந்த போதிலும் மக்களின் பிரச்னை தீர்ந்த பாடில்லை.
ஏ.டி.எம்.களில் ரூ.2 ஆயிரம் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே கிடக்கின்றன.
வங்கிகளில் கணக்கு இருந்தால் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளிலும் கையிருப்பில் பணம் இல்லை. எனவே, பணம் கேட்டு வருபவர்களுக்கு மிக குறைந்தபட்ச தொகையை கொடுக்கிறார்கள். அல்லது பணம் இல்லை என்று கவுண்ட்டரையே மூடி விடுகிறார்கள்.
இதனால் பண தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடுகிறார்கள். இந்த நிலையில் பணத்தட்டுப்பாடு பிரச்சனை இன்னும் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறி இருக்கிறார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள பத்திரிக்கையாளரிடம் அவர் கூறியதாவது:-
நாட்டின் முன்னேற்றத்துக்காகவே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முடிவுக்கு வந்ததும் இந்தியா பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் அடையும். குறிப்பாக இந்திய உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) பெரும் வளர்ச்சியை காணும். வரிவிதிப்பு முறைகள் விரிவடையும்.
தற்போது வங்கியில் குவிந்துள்ள முதலீடுகள் மூலம் மக்களுக்கு பல்வேறு இனிப்பான திட்டங்களை கொண்டு வர முடியும். பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் ஏற்படும்.
இப்போதுள்ள பணத்தட்டுப்பாடு இன்னும் 3 மாதத்தில் இருந்து 6 மாதங்கள் வரை நீடிக்கலாம். அதன் பிறகு இந்தியா ஒரு நல்ல பலனை நிச்சயம் காணும்.
இவ்வாறு அவர் கூறினார்.