கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள நோட்டுகளை கட்டுபடுத்தும் விதமாக இன்று இரவு 12 மணி முதல் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரத பிரதமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கருப்பு பணத்தை மீட்டெடுக்கவும், கள்ள நோட்டுகளை கட்டுபடுத்தவும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவோர் அடையாள அட்டை காட்ட வேண்டும், இதற்காக வங்கிகளில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். மேலும் நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம். வேலை செய்யாது எனவும், மேலும் நாளை வங்கிகள் செயல்படாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 10 முதல் வங்கி மற்றும் தபால் நிலையங்களிலும் ஒப்படைக்கலாம் என்றும், வங்கிகள் ஏற்றுக் கொள்ளாத பணத்தை ரிசர்வ் வங்கியில் கொண்டு மாற்றி கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நவம்பர் 11-ம் தேதி வரை அரசு மருத்துவமனை, பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையம், விமான நிலையங்களில் பழைய ரூ.500, 1000 நோட்டு செல்லும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் மங்கல்யான் விண்கலம், டெல்லி செங்கோட்டை படமும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
'ஆன்லைன்' பண பரிவர்த்தனை, வரைவு காசோலை, காசோலை பண பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.