சென்னை:அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும், டாக்டர் கில்நானி தலைமையிலான டெல்லி எய்ம்ஸ் டாக்டர் குழுவினரும் அவருக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொண்டனர்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து சீமா, மேரி சியாங் என்ற 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அவ்வப்போது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றாலும், இடையிடையே வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வருகின்றனர். தற்போது, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று 40-வது நாளாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் எழுதுவதற்கு அவர் பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த 3 நாட்களாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்ந்து இருந்தால், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச சிகிச்சையை மாற்றும் வகையில், தொண்டையில் மூச்சு விடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாயை எடுத்துவிட்டு, அவரை இயற்கையாகவே சுவாசிக்க வைத்துவிடலாம் என்று டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.