உலக உணவு தினத்தன்று ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் பசித்த ஏழை மக்களுக்கு வாகனம் மூலம் சென்று இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
உலக உணவு தினம் என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சியாகும். ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பியிருக்கத் தேவையில்லை. மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்தால் பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக தொண்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு சமூக முன்னேற்ற நடவடிக்கைகள் பலதரப்பட்ட மக்களால் நன்கு அறியப்பட்டது. இதன் நிறுவனராக அரவிந்த் ஜெயபால் உள்ளார். இந்நிறுவனத்தின் தூணாக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.
ரெயின்ட்ராப்ஸ் மற்றும் ஆசிப் பிரியாணி உணவகம் இணைந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது சென்னை மவுண்ட் ரோடு அருகே உள்ள ஆசிப் பிரியாணி உணவகத்தில் இருந்து வாகனம் புறப்பட்டது. சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத், இயற்கை விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், ஆசிப் உணவக நிர்வாக இயக்குனர் ஆகியோர் கொடியசைத்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பசித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியது.
ரெயின்ட்ராப்ஸ் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது இது முதல் முறையல்ல. விருந்தாளி என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் வாகனம் மூலம் சாலையோர மக்களின் பசியை தீர்த்து வருகிறது. உலக உணவு தினத்தை முன்னிட்டு இம்முறை அதிக அளவிலான மக்களுக்கு உதவும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால்.
ரெயின்ட்ராப்ஸ் ஆர்வலர்கள், சி.எஸ்.இ இந்தியா, சீர்ஸ் கேர்ள்ஸ் ஹோம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு விநியோகிப்பதில் உதவி புரிந்தனர். மக்கள் ஆட்டோ, மெகா டிஜிட்டல், சாஜ் அண்ட் தாஜ் ஆகியோரும் ரெயின்ட்ராப்ஸ்’ன் இந்த அரும் முயற்சியில் உறுதுணையாக இருந்தனர்.