சென்னை:சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்பும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2 கோடியே 29 லட்சத்தை ஊழியர்கள் பாபு, சதீஷ் ஆகியோர் காரில் கொண்டு சென்றனர். காரை டிரைவர் இசக்கிபாண்டி ஓட்டினார். துப்பாக்கி ஏந்திய காவலர் ஜோயல்முல்லா அவர்களுடன் சென்றார்.
திருவேற்காட்டை அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணத்தை வைப்பதற்காக ஊழியர்கள், பாபு, சதீஷ் அகியோர் சென்றனர். அப்போது காவலர் ஜோயல் முல்லாவை அருகில் உள்ள கடைக்கு செல்லுமாறு டிரைவர் இசக்கிபாண்டி தெரிவித்தார்.
பின்னர் அவர் மீதி பணம் ரூ.1 கோடியே 18 லட்சத்துடன் காரை கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது டிரைவர் இசக்கிபாண்டி புளியம்பேடு பகுதியில் காரை நிறுத்தி விட்டு பணத்துடன் தப்பி சென்றிருப்பது தெரிந்தது. மேலும் அவருக்கு உதவியாக சொகுசு காரில் கூட்டாளிகள் பின்தொடர்ந்து வந்திருப்பதும் தெரியவந்தது.
இசக்கிபாண்டியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் கிராமம் ஆகும். இதையடுத்து கொள்ளை கும்பலை பிடிக்க நெல்லை, தூத்துக்குடிக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே கொள்ளை கும்பல் தப்பி செல்வதற்கு முன்பு மறைமலைநகரில் உள்ள இசக்கிபாண்டியின் நண்பர் குமார் வீட்டில் தங்கி சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமாரை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த ரூ.7 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையடித்த பணத்தை கடத்தல்காரர்கள் பிரித்து கொடுத்து தப்பி சென்றிருப்பதாக தெரிகிறது. இசக்கிபாண்டியின் செல்போனில் பதிவான எண்களை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் மும்பை, பொள்ளாச்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஏ.டி.எம். பணம் கொள்ளையில் குற்றவாளியை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.