சென்னை:சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அவரது தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
இதையடுத்து, ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி டெல்லி எய்ம்ஸ் டாக்டர் சுதிர் கே.குப்தா உள்ளிட்ட 5 டாக்டர்கள் கொண்ட குழு, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வது உறுதியானது. அதன்படி ராம்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலையில் பிரேத பரிசோதனை நடைமுறைகள் தொடங்கின.
முதலில், நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் ஒப்புதல் கடிதத்ததில் ராம்குமார் தந்தை கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை தொடங்கியது. தடயவியல்துறை தலைவர் செல்வக்குமார் தலைமையில் டாக்டர் சுதிர் கே.குப்தா, டாக்டர் வினோத், டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர் மணிகண்டராஜா ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனை நிகழ்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும் ராம்குமாரின்உடல் அவரது தந்தை பரமசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ராம்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.